தீக்கதிர்

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் நாகாலாந்துக்கு உதவுங்கள்..! கேரளா மக்களுக்கு பினராயி வேண்டுகோள்….!

திருவனந்தபுரம்;
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள, நாகாலாந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேரள மக்களுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 48 ஆயிரம் குடும்பத்தினர் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். 3 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

800 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அம்மாநில அரசு, மத்திய அரசிடம் முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டுள்ளது. பல்வேறு மாநில மக்களும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

இதனடிப்படையில், நாகாலாந்து மக்களுக்கு உதவ கேரளா மக்கள் முன்வரவேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கொடிய வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வருகிறோம்; ஆனால், நாம் வெள்ளத்தில் எப்படி தத்தளித்தோமோ, அவ்வாறு நாகாலாந்து மக்களும் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கண்ணீர் சிந்தி வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன், “நாம் பாதிக்கப்பட்டபோது, நாகாலாந்தின் துணை முதல்வர் நமக்காக நிதியுதவி வழங்கி அம்மாநில மக்கள் சார்பில் ஆறுதல் அளித்ததை மறக்க முடியாது” என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.