தீக்கதிர்

பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தின் முதலாமாண்டு சோமனூரில் தடையை மீறி நள்ளிரவில் அஞ்சலி

கோவை,
சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்தில் பலியானவர்களுக்கு முதலாமாண்டு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தடையை மீறி நள்ளிரவில் அஞ்சலி செலுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த சோமனூர் பேருந்து நிலையத்திலுள்ள மேற்கூரை கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் சம்பவஇடத்திலேயே 5 பேர் பலியாகினர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஓராண்டான நிலையில், விபத்தில் இறந்தவர்களுக்கு சோமனூர் பவர்ஹவுசிலிருந்து ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அனுமதி கோரியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் வியாழனன்று நள்ளிரவு 12 மணியளவில் 20க்கும் மேற்பட்டோர் சோமனூர் பேருந்து நிலையத்தில் பலியானவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதனால் சோமனூர் பேருந்து நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.