ஈரோடு,
ஈரோட்டில் பெற்றோர்கள் முன்பு காவல் ஆய்வாளர் அடித்து அவமானப்படுத்தியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் ஷனிபா வீதியில் வசித்து வருபவர் எம்.ராமசாமி (35). இவரது மகன் அருண்குமார் (18). இவர் கடந்த புதனன்று இருசக்கர வாகனத்தில் குளத்து அருகே சென்றபோது ரோந்து பணியில் இருந்த கருங்கல்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியசீலன் அருண்குமாரின் வாகனத்தை நிறுத்தச் சொன்னார். ஆனால் அருண்குமார் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாகன எண்ணை பதிவு செய்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர் சத்தியசீலன், அருண்குமாரின் வீட்டிற்கு காவலர்களை அனுப்பி அவரை அழைத்து வரும்படி தெரிவித்துள்ளனர். இதன்பின் அன்றைய தினம் இரவு அவரது வீட்டுக்கு சென்ற காவலர்கள் அருண்குமார் மற்றும் அவரது பெற்றோரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, அருண்குமாரை அங்கிருந்த உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மிரட்டியதுடன், பெற்றோர் முன்பு அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்பின் அவரின் பெற்றோர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சத்தியசீலன் அருண்குமாரை விடுவித்துள்ளார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அருண்குமார் வியாழனன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கருங்கல்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியசீலன், தங்களை குடும்பத்துடன் காவல்நிலையத்தில் வைத்து அவமானப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆகவே, இவரின் இறப்பிற்கு காரணமான உதவி ஆய்வாளர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டும் எனக்கோரி அருண்குமாரின் பெற்றோர்கள் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசை சந்தித்து மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.