===எம்.மணிமேகலை===                                                                                                      உழைக்கும் பெண்களில் பெண் ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். ஆட்சியாளர்கள் நவீன தாராளமயக்கொள்கைகளை கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தியதன் விளைவாக இன்று கல்வி கடைச்சரக்காக மாறி உள்ளது.

வணிகமயமாக்கப்பட்ட கல்வியில் மாணவர்கள் நுகர்வோர்; ஆசிரியர்கள் விற்பனையாளர். விற்பனையாளருக்கு ஆசிரியர்களுக்கான அங்கீகாரம் கிடைக்குமா?
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான உறவு உடைந்து போனது. இந்த இடத்தில் தான் இன்றைய மனப்பாடக் கல்வி முறை ஒரு போட்டிக்கலாச்சாரத்தை உருவாக்கி ஆசிரியரும் மாணவரும் தத்தமது இருப்பை பாதுகாக்க பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. தொடக்கக் கல்வி முதல் கல்லூரி கல்வி வரை பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் டீசிங் கொடுமைக்கும் ஆளாகும் அவலம் உள்ளது.

மறுபுறம், பெண் ஆசிரியர்களை 100 சதம் ரிசல்ட் காட்டவில்லை என்று அதிகாரிகளும், பள்ளி செயலாளரும் மிரட்டுவது அதிகரித்துள்ளது. இது பெண் ஆசிரியர்களுக்கு கடுமையான நிர்ப்பந்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

தனியார் பள்ளியாக இருந்தால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாடாக உழைத்தாலும் அவர்களுக்கு ஊதியமாக கிடைப்பது சில ஆயிரங்கள் மட்டும்தான். இந்த சொற்ப சம்பளத்திற்கு பள்ளி நிர்வாகி, முதல்வர் என்று யாருடைய முகமும் கோணாமல் நடக்க வேண்டும். நேரம் காலம் பாராது பணிபுரிய வேண்டும். பல கல்வி நிறுவனங்களில் போதுமான கழிப்பறை வசதி கூட இல்லாத சூழல். ஒரு சில அதிகாரிகளின் இரட்டை அர்த்தப்பேச்சு, பெண் ஆசிரியர்கள் என்பதால் ஒருமையில் பேசுவது போன்றவையும் தினம் தினம் மனதை ரணமாக்கும் துயரங்கள்.

அரசுப் பள்ளிகளில்  கே.ஜி.வகுப்புகள் துவங்குக!
மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை இணைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது. இது ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வியை தரமறுக்கின்ற செயலாகும். குறிப்பாக பெண் குழந்தைகள் சமூகத்தில் நிலவுகின்ற அசாதாரணமான சூழல் மற்றும் அச்சத்தின் காரணமாக பக்கத்து ஊருக்கு சென்று படிப்பதில் சிரமம் ஏற்படும். இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே அரசு இணைக்கின்ற முயற்சியை கைவிட்டு உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் முன்பருவகல்வி தொடங்கப்பட வேண்டும். அதற்கென தனி ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும். பெண் ஆசிரியர்கள் இந்த பிரச்சனைகளையெல்லாம் எதிர்கொள்கிறார்கள்.

இவற்றுக்குத் தீர்வு காண, அனைத்து பெண் ஆசிரியர்களும், அகில இந்திய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு என்ற ஒற்றைக்குடையின் கீழ் சங்க எல்லைகளை கடந்து சங்கமித்துள்ளோம். வரும் காலங்களில் ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்டிட, பள்ளிகளில் பாலியல் கல்வி பாடத்திட்டத்தோடு இணைத்து நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முயற்சிகளை மேற்கொள்வோம்.

பெண்கள் சுயமாக சிந்திப்பதை தடுப்பதும் ஒரு வன்முறையே. இதையெல்லாம் மாற்ற குழந்தைகளிடமிருந்தே உரையாடலை தொடங்க வேண்டும். அதற்கேற்ற கல்வித்திட்டம் கொண்டு வர வேண்டும். பெண்களை மதிக்க கற்றுத்தர வேண்டும்.

மேலும் பெண் ஆசிரியர்கள் என்ற முறையில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திட, குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனையை விரைந்து வழங்கிட, நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட, ஆண், பெண் சமத்துவத்தை நிலை நாட்டுவதன் மூலம் ஒரு வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கிட போராட்டங்களை முன்னெடுப்போம். பெண் உரிமைகளை பாதுகாப்போம். அனைவரும் ஒன்றிணைந்து போராடி பெண் உரிமைகளை மீட்டெடுக்க இந்த மாநாட்டில் உறுதியேற்போம்.

பெண் ஆசிரியபெருமக்களே அலைகடலென திரண்டு வாரீர்…..!

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சங்கமிப்போம். வெற்றி பெறுவோம்!

கட்டுரையாளர்: அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்புக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர்.

Leave a Reply

You must be logged in to post a comment.