திருப்பூர்,
திருப்பூரில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த இரு வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரி (20). இவர் திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் தங்கியிருந்து மங்கலம் சாலை தாடிக்கார முக்கு அருகே உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வியாழனன்று மாலை வேலை முடிந்ததும் லோகேஸ்வரி செல்போனில் பேசியபடி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென்று அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். லோகேஸ்வரி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரட்டி சென்றனர். தப்பிச் சென்றோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் சிறுபூலுவப்பட்டி ஜீவாநகரை சேர்ந்த சூரியகுமார் (23), ரங்கநாதபுரத்தை சேர்ந்த வெட் காளீஸ்வரன் (20) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.