தீக்கதிர்

பெட்ரோல் விலை ஏற்றத்தை எதிர்த்து ஒரிசாவில் ஆளும்கட்சி போராட்டம்

புவனேஸ்வர் :

ஒரிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் சார்பில் கடுமையாக உயர்ந்து வரும் பெட்ரோல்/டீசல் விலையை குறைக்கக்கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

மத்திய பாஜக அரசு பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தினமும் விலையை மாற்றியமைக்க அனுமதி வழங்கியது. இதன்மூலம், எண்ணெய் நிறுவனங்கள் நாளும் விலையை உயர்த்தி வருகின்றன. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் அதற்கேற்ப கலால் வரியை உயர்த்தி விலையை குறைக்காமலே இருந்து வந்தது. பாஜக தலைமையிலான மக்கள் விரோத அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக ஒரிசாவில் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள் மாநிலத்தில் பல பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் பங்க்களின் முன்பு 2 மணிநேர ஆர்பாட்டங்களை நடத்தினர். இதில், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பதாகைகளை ஏந்தியும், துண்டு பிசுரங்களை வழங்கியும் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.