தஞ்சாவூர்;
மாவட்டத்தில் இரண்டாவது வாரமாக விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய 3 தினங்களில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கமாக உள்ளது.

மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் 90 விசைப்படகுகளும் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் உள்ளன. கடந்த 23 ஆம் தேதி இப்பகுதியில் மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுகளை ஆய்வு செய்த போது தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக கூறி, 5 விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுத்தனர். அந்த விசைப்படகுகளுக்கு மீன்பிடி தொழில் செய்ய அனுமதிச் சீட்டு, மானிய விலையில் டீசல் வழங்க மறுத்து விட்டனர்.

இந்த நடவடிக்கையை கைவிடக் கோரியும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் விசைப்படகு மீனவர்கள் சங்க மாநிலச் செயலாளர் ஏ.தாஜுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு எடுத்தனர். இதையடுத்து கடந்த 25 ஆம் தேதி முதல் 14 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விசைப்படகுகள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.