சென்னை;
பாலியல் தொந்தரவு கொடுத்த புகாருக்குள்ளான லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகனை பணியிட மாற்றம் செய்து, குற்றவழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பெண் எஸ்.பி. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெண் எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில், இதுகுறித்து விசாரிக்க விசாகா குழுவை டிஜிபி அமைத்திருந்தார்.
இந்நிலையில் பெண் எஸ்.பி.,உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் விதிமுறைகளின்படி சுயேச்சை உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தற்போதுள்ள குழு மீது நம்பிக்கையில்லை.எனவே விசாகா கமிட்டியை மாற்றியமைக்குமாறும், லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகனை பணியிடமாற்றம் செய்து, குற்றவழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சத்ருகன் புஜாரி முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. பாலியல் புகார் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே குழு இருப்பதாகவும், அந்த குழுவிடம் பெண் எஸ்.பி. புகார் அளிக்கவில்லை என்றும் புகாருக்கு உள்ளான ஐ.ஜி. முருகன் தரப்பு வாதிட்டது.
அந்த குழுவுக்கு தாம்தான் தலைவராக இருந்ததாகவும், புகார் எழுந்தவுடனே அக்குழு கலைக்கப்பட்டு விட்டதாகவும். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்க வேண்டும் என்று பெண் எஸ்.பி. தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது சிசிடிவி காட்சிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் விசாகா குழுவிடம் ஒரு நகல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

இதையடுத்து, பாலியல் புகார் குறித்து விசாரிக்க டிஜிபி அமைத்த விசாகா குழுவை எதிர் மனுதாரராக சேர்க்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.