சென்னை,
விசாகா கமிட்டியை மாற்றியமைக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசாகா குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2013-ம் ஆண்டு மத்திய அரசு சட்டமியற்றியது.
இந்நிலையில் ஐஜி பொறுப்பில் இருக்கும் ஒருவர் தனக்கு கீழே பணி புரியும் பெண் எஸ்பியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். உயர் அதிகாரி ஆலோசனை நடத்த அழைக்கிறார் என்பதால் ஐஜியின் அலுவலக அறைக்கு சென்றிருக்கிறார் பெண் எஸ்பி. அப்போது உள்ளே சென்ற பெண் எஸ்பியிடம் ஐஜி தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்
ஏற்கனவே இதே ஐஜி பல முறை பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். இந்நிலையில் பெண் எஸ்பி தனக்கு நேர்ந்து பாலியல் தொல்லைகள் குறித்து  முறையாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கிறார்.  ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது முதல்வர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடமும் புகார் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அவசர அவரமாக பெண் போலீஸ் கூடுதல் டிஜிபி சீமா  அகர்வால் தலைமையில் கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர்  கொண்ட  விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து சிபிசிஐடி விசாரிக்க காவல்துறை உள்புகார் விசாரணை குழுவான விசாகா கமிட்டி பரிந்துரை செய்தது.
பாலியல் புகார் அளித்த பெண் எஸ்.பி. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், விசாகா கமிட்டியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த யாரும் இல்லை என்றும், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உயர் அதிகாரி தற்போது அதே பணியில் இருந்து வருகிறார் என்றும், எனவே அவரை உடனடியாக பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதுள்ள விசாகா கமிட்டியை கலைத்துவிட்டு புதிய குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: