புதுதில்லி;
பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது பசுக் குண்டர்களாலும், கும்பல்களாலும் நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்காத மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சிறுபான்மையினரையும், தலித் மக்களையும், மாடுகளை வியாபாரத்துக்குக் கொண்டு செல்பவர்களையும் ஆர்எஸ்எஸ் – பாஜக மதவெறி பிடித்த பசுக்குண்டர்கள் தாக்கிக் கொலை செய்யும் சம்பவங்கள் பல மாநிலங்களில் நடந்தன.

இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்தக் கோரி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவைக் கடந்த ஆண்டு விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் அடங்கிய அமர்வு பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பசு குண்டர்களின் வன்முறையைத் தடுக்க டிஎஸ்பி அந்தஸ்துக்குக் குறைவில்லாமல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை எத்தனை மாநிலங்கள் பின்பற்றி இருக்கின்றன, அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது.ஆனால், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த மாநிலங்கள் மீது தெஹ்சீன் பூணாவாலா என்ற சமூக ஆர்வலர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில், பசு குண்டர்களையும், கும்பல்களாகச் சேர்ந்து சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படுபவர்களுக்கு எதிராக தனியாகச் சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

மேலும், பசு குண்டர்கள் மூலம் அரங்கேற்றும் தாக்குதலைத் தடுக்க மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஓய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்பாவி மக்கள் மீது பசு குண்டர்கள் மற்றும் கும்பல்களாக தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க மொத்தமுள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில், 11 மாநிலங்கள் மட்டுமே அறிக்கையைத் தாக்கல் செய்தன. மற்ற மாநிலங்கள் ஏதும் தாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிபதிகள் பெரும் அதிருப்தியும், கடும் கோபமும் அடைந்தனர்.

அடுத்த ஒருவாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் விரிவான அறிக்கையையும், விளக்கத்தையும் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

இந்த விசாரணையின் இடையே மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘‘பசு குண்டர்களால் நடத்தப்படும் வன்முறைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதற்காக மத்தியஅமைச்சர்கள் கொண்ட அதிகாரமிக்க குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்’’ எனத் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.