தீக்கதிர்

நான் உயர் சாதியினருக்குத்தான் விசுவாசமாக இருப்பேன் : உ.பி. பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங் சொல்கிறார்..!

லக்னோ;
உத்தரப்பிரதேச மாநிலம் பயிரியா தொகுதி-யின் பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் சுரேந்திரா சிங். கடைந்தெடுத்த இந்துத்துவா பேர்வழிகளில் ஒருவர். தலித்துக்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் தொடர்ந்து வெறுப்பைக் கக்கி வருபவர். அந்த வகையில், தற்போது மீண்டும் அவர் தனது வன்மத்தைக் காட்டியுள்ளார்.

எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக, சாதி ஆதிக்கவாதிகள் வியாழனன்று உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். அரசு சொத்துக்களை சேதப்படுத்தினர். இதையொட்டி பேட்டி ஒன்றை அளித்துள்ள சுரேந்திரா சிங், சாதி ஆதிக்கவாதிகளின் பந்த்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், “உயர்சாதி மக்கள்தான் என்னை எம்எல்ஏ ஆக்கினார்கள்; இஸ்லாமியர்களோ, தலித்துக்களோ என்னை எம்எல்ஏ ஆக்கவில்லை; அதனால் உயர் சாதியினருக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்; உயர்சாதியில் உள்ள எனது ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டால், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்வேன்” என்றும் பகிரங்கமாக கூறியுள்ளார்.