சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம்  22ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதியாக பேராடிய மக்கள் மீது , காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு சார்பில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த  ஆணையம் ஏற்கனவே விசாரணையை தொடங்கி விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 3 மாத கால அவகாசம் முடிவடைவதால், மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கிடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன் என்பவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும் படி  கடந்த மாதம் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் வழங்கியது. இது விசாரணை ஆணையத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியது.
இந்நிலையில் தற்போது அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மேலும் 6 மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: