திருப்பூர்,
திருப்பூர் அருகே அணைப்புதூர் மற்றும் அவிநாசி பகுதியில் ரசாயன நிறமிகள் பயன்படுத்தி வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் விநாயகர் சிலைகளில் சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயன நிறமிகள் கலக்கப்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் வடக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் லாவண்யா தலைமையில் அதிகாரிகள் அவிநாசி சந்தைமேடு மற்றும் அணைப்புதூர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்தோர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த விநாயகர் சிலைகளை ஆய்வு செய்தனர். இதில் நீரில் கரைக்கும்போது சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் ரசாயன நிறமிகள் கலந்து சிலைகள் தயாரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இரு இடங்களிலும் விற்பனைக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட ரசாயன விநாயகர் சிலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவை பல லட்சம் மதிப்புள்ளவை என்று கூறப்படுகிறது. இந்த சிலைகளை அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.