மேட்டுப்பாளையம்,
செண்டுமல்லி பூக்களின் விளைச்சல் அதிகரித்தும் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதி மலர் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் உதிரி பூக்கள் பெரும்பாலும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் முக்கியமானது செண்டுமல்லி. இச்செடியின் ஆயுள் காலம் 160 நாட்கள் என்ற நிலையில் இரண்டாவது மாதத்தில் இருந்து ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் வரை பூக்கள் பூக்கும். கேரளாவின் ஓணம் திருவிழா காலங்களில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகும். மற்ற காலகட்டத்தில் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே விற்பனையாகும். மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில்வாழை, கரும்பு, மஞ்சளுக்கு அடுத்தபடியாக செண்டுமல்லி சாகுபடியே பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இப்பகுதிகளில் முன் கூட்டியே பெய்த போதுமான மழை காரணமாக இதன் விளைச்சல் அதிகரித்தது. செண்டுமல்லி தோட்டங்களில் ஊடு பயிராக கோழிக்கொண்டை பூக்களையும் நடவு செய்திருந்தனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை காரணமாக அம்மாநிலமே நிலை குலைந்து போய் உள்ளது.

இதனால், இங்கிருந்து கேரளாவிற்கு அனுப்பி வைத்திடும் செண்டுமல்லி பூக்களின் வரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. கேரள வியாபாரிகளின் வருகை தடைபட்ட காரணத்தினால் இதன் விலை தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.10க்கும் கீழ் சரிந்து விட்டது. இதனால் போட்ட முதலீடு கூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.