கோவை,
கோவையில் எலிகாய்ச்சலுக்கு இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையை தொடர்ந்து எலி காய்ச்சல் பரவி வருகிறது. கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோவை கிணத்துக்கடவு கொண்டம்பட்டியை பகுதியைச் சார்ந்த சதீஷ்குமார் (29) என்பவர் கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த புதனன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பின் அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றிவெள்ளியன்று உயிரிழந்தார்.இதற்கிடையே, வால்பாறையை சார்ந்த சின்னையா (65) என்பவர் தற்போது எலிக்காய்ச்சல்பாதிப்பின் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கோவை மாவட்ட மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். அதேநேரம், கோவை அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் போதிய அளவு இருப்பதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.

எலிக் காய்ச்சல் பரவல் தொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி கூறுகையில், எலிக்காய்ச்சல் லெப்டோஸ்பைரோசிஸ் என்கிற
பாக்டீரியாவல் பரவுகிறது. இந்தநோய் தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் மூலம் நீர், நிலம் மற்றும் உணவு பொருட்களில் பரவும்போது இந்த நோய் மனிதர்களை தாக்குகிறது. எலிக்காய்ச்சல் பரவாமல் இருக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது தொற்று நோய் கிடையாது. தண்ணீர், உணவு மூலமாக தான் அதிகம் பரவும். தொடர் காய்ச்சல், சிவந்த கண்கள், தலைவலி, உடல்வலி ஆகியவை இந்தகாய்ச்சலின் அறிகுறிகள். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால்பொதுமக்கள் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும். மருந்து கடைகளில் தன்னிச்சையாக மருந்து வாங்கி சாப்பிட வேண்டாம். இந்நோய்க்கு தேவையானமருந்துகள் அரசு மருத்துவமனையில் இருப்பில் உள்ளது. எலிக்காய்ச்சல் குணப்படுத்த கூடியநோய் தான். ஆகவே, பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. மேலும், எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் யாராவது இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளா, தமிழக எல்லைப்பகுதியில் உள்ள 18 கிராமங்களிலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.