லக்னோ:
கோரக்பூர் மருத்துவமனையிலிருந்து அடுத்தடுத்து மருத்துவர்கள் ராஜினாமா செய்து வருவதாகவும், தற்போது 25 மருத்துவர் பணியிடங்கள் இந்த மருத்துவமனையில் காலியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 83-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி இறந்தன.மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனத்துக்கு, நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை அந்த நிறுவனம் நிறுத்தியதே, குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது.

எனினும், அப்போது குழந்தைகள் பிரிவில் பணியாற்றிய டாக்டர் கபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். ஆனால், உத்தரப்பிரதேச பாஜக அரசோ, குழந்தைகள் இறப்புக்கு டாக்டர் கபீல்கானையே பொறுப்பாக்கி அவரைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது.
இது, டாக்டர் கபீல் கானுடன் பணியாற்றிய மற்ற மருத்துவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கபீலுக்கு நேர்ந்தது நாளை நமக்கும் நேரலாம் என்று அவர்கள் ஒவ்வொருவராக தங்களின் வேலையை ராஜினாமா செய்யத் துவங்கினர். தற்போது குழந்தைகள் இறந்து ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில், இந்தக் காலத்தில் 20-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்துள்ளனர்.பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 மருத்துப் படிப்பு இடங்களும், 68 மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களும் உள்ளன. அத்துடன் இங்கு 124 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 101 மருத்துவர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச பாஜக அரசின் அலட்சியமும், அச்சுறுத்தலுமே மருத்துவர்களின் ராஜினாமாவுக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.