நாமக்கல்,
காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் அதனை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளை காவிரி ஆறு கடந்து செல்கிறது. சமீபத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் அப்பகுதியில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து காவிரிக் கரை ஓரங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அருகிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இயல்பு வாழ்க்கை திரும்பியதால் தங்களது இல்லங்களுக்கு திரும்பத் துவங்கியுள்ளனர்.

இச்சூழலில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக்கழிவுகள் மேற்குறிப்பிட்ட பகுதிகளின் ஆற்றின் கரைஓரங்களில் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால் நிலத்தடிநீர் மாசுபடுவதுடன், அந்நீரை குடிக்கவும், விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த குப்பை கழிவுகளால் இப்பகுதியில் பல்வேறு தொற்று நோய்களும் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆகவே, தமிழக அரசு, சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு குப்பை கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.