அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தனி அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளியன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த அறையை திறந்து ஆவணங்களை பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ளது பாலையம்பட்டி. இங்குள்ள அனந்தபுரிநகரில் வசித்து வருபவர் செய்யாத்துரை. இவர் எஸ்.பி.கே கன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரராக உள்ளார். தமிழக அரசின் மிகப் பெரிய சாலைப் பணிகள் இவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் உள்ள சாலைகள் பராமரிப்பு அனைத்தும் இந்நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.கே. நிறுவனத்தின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த ஜூலை.,16 அன்று சோதனை நடைபெற்றது. அதில் 160 கோடி ரொக்கப்பணம், 100 கிலோ தங்க கட்டிகள் மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும், ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

இதையடுத்து, அனந்தபுரி நகரில் மாடியில் உள்ள ஒரு அறையில் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் வைத்து அதிகாரிகள் கடந்த ஜூலை.,22 இல் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். இந்நிலையில், வெள்ளியன்று மதியம் 1 மணிக்கு அருப்புக்கோட்டை வந்த மதுரை மற்றும் நெல்லையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், செய்யாத்துரையின் மூத்த மகன் நாகராஜன் முன்னிலையில், சீல் வைக்கப்பட்ட அறையை திறந்தனர்.

பின்பு, அங்குள்ள ஆவணங்களை மாலை வரை சரிபார்த்து வருகின்றனர். செய்யாத்துரை வீட்டில் மீண்டும் சோதனை நடைபெறுவதால், அதிமுக முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒரு புறம் குட்கா ஊழல் விசாரணை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர் செய்யாத்துரை வீட்டில் சோதனை மீண்டும் தொடர்ந்திருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.