திருப்பூர்,
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வெள்ளியன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 875 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 30வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் பொன்முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். இதில்,கரூர் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் ஜோதி வெங்கடேஷ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: மனிதனின் வாழ்வை பெருமைக்குரியதாக வைத்திருப்பதில் கல்வி மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது.  மேலும், கல்விக்கு ஆண், பெண் என்றும் பாகுபாடு கிடையாது. மனிதராய் பிறந்த அனைவருமே அடிப்படை உரிமையான கல்வி கற்க வேண்டியது அவசியமாகிறது. அழிவில்லாத சிறந்த செல்வம் கல்விவே ஆகும். ஆணுக்கு கல்வி அளிப்பது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி அளிப்பதாகும். அதுவே ஒரு பெண்ணுக்கு கல்வி அளிப்பது அக்குடும்பத்திற்கே கல்வி அளிப்பதாகும். இன்று உயர்கல்வி பெறும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நம்பிக்கையே மாணவிகளாகிய உங்களின் வெற்றிக்கும் எதிர்கால வாழ்வுக்கும் அடிப்படை ஆகும்.  இன்னும் நீங்கள் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. காலத்திற்குகேற்ப புதிய மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தன் உயர்ந்த நெறிகளில் இருந்து வழுவாமல் சமூகத்தோடு கரம் கோர்த்து பயணத்தை தொடர வேண்டும்.

மேலும், கல்வி நிறுவனத்தின் தரத்தை நிர்ணயிக்க சிறந்த சான்று அங்கு பயிலும் மாணவ-மாணவியர்களே. அந்த வகையில் இக்கல்லூரியின் புகழையும், வரலாற்றையும் இங்குப் படித்த மாணவிகள் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் தேடிப்போகும் வாய்ப்புகளை விட நம்மைச் சுற்றியிருக்கும் வாய்ப்புகளை தான் முதலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில், 2013-2016ம் ஆண்டில் தேர்ச்சிப் பெற்ற இளங்கலை பிரிவு மாணவிகள் 685 பேரும், முதுகலை பிரிவு மாணவிகள் 190 பேரும் என 875 மாணவிகள் பட்டம் பெற்றனர். மேலும், இளங்கலை பிரிவில் மாணவிகள் சிவசங்கரி, உஷா, முதுகலை பிரிவில் மாணவி சித்ரா ஆகியோர் பல்கலை கழக அளவில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றனர். இதுதவிர பல்கலைக் கழக அளவில் தேர்ச்சி பெற்ற 33 மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும்  சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: