தீக்கதிர்

எந்த நாட்டுடனும் போரிட மாட்டோம்: இம்ரான் கான்…!

இஸ்லாமாபாத்;
பாகிஸ்தான் எந்த நாட்டுடனும் இனி போரில் ஈடுபடாது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் ராணுவ அணிவகுப்பில் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டு உரையாற்றினார்.இந்த அணிவகுப்பில் ராணுவ உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம்ரான் கான் பேசுகையில், “நான் ஆரம்ப காலத்திலிருந்தே போருக்கு எதிரானவன்.

பாகிஸ்தான் எந்த நாட்டுடனும் எதிர்காலத்தில் போரிடாது. பாகிஸ்தான் ராணுவத்தைப் போல எந்த நாடும் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடவில்லை. நாட்டை அனைத்து ஆபத்துகளில் இருந்து மீட்டு பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் நமது பாதுகாப்புப் படையின் பணியாகும்” என்றார்.

மேலும் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசும்போது, “நம்மிடம் நிறைய கனிம வளங்கள், நான்கு பருவ நிலைகள், வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. நமது கடமையை நேர்மையாக செய்தால் நிச்சயம் நமது இலக்கை அடையலாம்” என்றும் இம்ரான் கான் கூறினார்.