தீக்கதிர்

ஈரோடு மாட்டுச்சந்தையில் ரூ.3.5 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ஈரோடு,
ஈரோட்டில் வியாழனன்று நடைபெற்ற மாட்டுச்சந்தையில் ரூ.3.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளன.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் காவிரிக் கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன்,வியாழன் ஆகிய இரு நாட்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதனன்று வளர்ப்பு மாடுகளும், வியாழன்று கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்புக் கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய இச்சந்தைக்கு, ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வளர்ப்பதற்காகவும், விற்பனைக்காகவும் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதேபோல், அவற்றை கொள்முதல் செய்ய கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வியாழனன்று நடைபெற்ற சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள், விவசாயிகள், மாடுகள் வரத்தும் சென்ற வாரத்தை விட அதிகரித்தே காணப்பட்டது.

இதுகுறித்து, மாட்டுச்சந்தை மேலாளர் ஆர். முருகன் தெரிவிக்கையில், தென் மாநிலங்களைச் சார்ந்த வியாபாரிகளில் மழை குறைந்ததன் காரணமாக கேரளா, கர்நாடகா மாநில வியாபாரிகள் உள்பட அனைத்துப்பகுதி வியாபாரிகள், விவசாயிகள் வழக்கம்போல் வந்திருந்தனர். இந்த வாரச் சந்தையில் 400 பசு மாடுகள், 300 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளது. மொத்தத்தில் சுமார் ரூ.3.5 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.