பெங்களூரு;
இந்து பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்யக் கோரி, பெங்களூருவில், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்துத்துவ பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி இந்த ஊர்வலம் நடைப்பெற்றுள்ளது. இதில், நடிகர் பிரகாஷ் ராஜ், சுவாமி அக்னிவேஷ், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.ஊர்வல நிறைவில், “இந்து பயங்கரவாத அமைப்புக்களைத் தடை செய்ய வேண்டும்” என்று கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா-வுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
“மூத்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு, லங்கேஷை துப்பாக்கியால் சுட்ட நபர் உட்பட பலரைக் கைது செய்துள்ளது. இவர்கள், இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில், சனாதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்புக்களின் வழிகாட்டுதலில் இந்த படுகொலையை செய்துள்ளனர். முற்போக்குச் சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோரையும் இவர்கள்தான் படுகொலை செய்துள்ளனர்.

இந்த அமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு, வரும்காலங்களில் மேலும் படுகொலைகளை செய்யலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே, பயங்கரவாதிகளை உருவாக்கும் அமைப்புக்களை மத்திய – மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். அமைதி, சகிப்புத்தன்மை, மரியாதை, அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்பு பற்றி இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் வகையில், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், இடதுசாரி எழுத்தாளரான கோவிந்த் பன்சாரே, 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதியும், கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் இந்துத்துவ அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டாலும் ஒருவரும் கைது செய்யப்படாமல் இருந்தனர். இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ், கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக் கொல்லப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக சிறப்புப் புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, கொலையாளியான பரசுராம் வாக்மோர் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சனாதன் சன்ஸ்தா, ஸ்ரீராம் சேனா, இந்து யுவ சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து பயங்கரவாத அமைப்புகள் லங்கேஷ் படுகொலையின் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. கல்புர்கி படுகொலையிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்தே இந்த அமைப்புக்களைத் தடை செய்ய வேண்டும் என்று கவுரி லங்கேஷின் முதலாமாண்டு நினைவுநாளில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடைப்பெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில்‘தி ஒயர்’ பத்திரிகை ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, ஜேஎன்யு மாணவர் பேரவை முன்னாள் தலைவர் கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.