புதுதில்லி:
ஆர்எஸ்எஸ் பேர்வழியான அர்னாப் கோஸ்வாமி, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகளை இழிவுபடுத்துவதற்காகவே ‘ரிபப்ளிக் டிவி’ என்ற செய்தித் தொலைக்காட்சியை நடத்தி வருகிறார். ஒரு ஊடகம் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நெறிகள் எதையும் கடைப்பிடிக்காமல் தமக்கு பிடிக்காதவர்களை அவதூறு செய்வதையே தொழிலாகக் கொண்டு இந்த டிவியை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் இளம் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானிக்கு எதிரான கட்டுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டார். அதாவது, கடந்த ஜனவரி மாதம் தில்லி நாடாளுமன்றச் சாலையில், ஜிக்னேஷ் மேவானி பேரணி ஒன்றை நடத்தினார். மிகவும் எழுச்சியுடன் நடைப்பெற்ற இந்த பேரணியை, தோல்வியடைந்த பேரணி ‘ஜிக்னேஷ் பிளாப் ஷோ’ என்று என்ற வர்ணித்து செய்தி வெளியிட்டார். அதுமட்டுமன்றி, அந்த பேரணியில் தனது டி.வி.யின் பெண் நிருபர் துன்புறுத்தப்பட்டதாக கூறி, தனது நிருபரைத் துன்புறுத்தியவர் இவர்தான் என்று சிங் என்பவரை அடையாளம் காட்டினார். மேலும் இந்த சிங் ஒரு காமுகர், தேச விரோதி, கீழ்த்தரமானவர், முறையற்ற நடத்தை கொண்டவர் என்றெல்லாம் – அந்த செய்தியில் சேற்றை வாரி இறைத்தார்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்ற நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிங்கும், அவரது மனைவியும் செய்தி ஒளிபரப்பு தர ஆணையத்திடம் புகார் அளித்தனர். இந்த ஆணையமானது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு என்ற நிலையில், அது தற்போது ரிபப்ளிக் டிவி-க்கு நோட்டீஸ் அனுப்பி தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

மேலும், “ஜிக்னேஷ் பிளாப் ஷோ-வின் தொகுப்பாளரான அர்னாப் கோஸ்வாமி, செய்தித்தர ஆணைய விதிமுறைகளுக்குப் புறம்பாக, நெறியற்ற, தேவையற்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்; எனவே, அர்னாப் கோஸ்வாமி இதற்காக அவரது டி.வி.யிலேயே முழுமையான வருத்தம் தெரிவித்து; அதன் சிடி-யை ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று உத்தரவைப் பிறப்பித்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.