திருநெல்வேலி;
திசையன்விளை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் 2 பேருக்கு பொருத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் திசையன் விளை அருகே உள்ள பனைவிளையைச் சேர்ந்த சேகர் மாணிக்கவல்லியின் மகன் கோபி கிருஷ்ணன்(16). இவர் திசையன் விளையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த ஆக. 26 ஆம் தேதி திசையன்விளையில் இருந்து உவரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த கோபிகிருஷ்ணன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை. குலவணிகர்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோபிகிருஷ்ணன் மூளைச்சாவு அடைந்தது குறித்து நெல்லை அரசு மருத்துவமனை டீன் கண்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அரசு மருத்துவர்கள் 4 பேர் கொண்ட குழுவினர் கோபி கிருஷ்ணன் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து கோபி கிருஷ்ணனின் பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டதையடுத்து, கோவை தனியார் மருத்துவ மனையில் 16 வயது சிறுமிக்கு கல்லீரலும், மதுரை தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கு சிறுநீரகமும், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கு கண்களும் பொருத்தப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.