தீக்கதிர்

27 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்க: மு.க.ஸ்டாலின்

சென்னை,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 வருடங்களாக சிறையில் இருக்கும் ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பதுதான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த திமுகவின் நிலைப்பாடாகும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும், 27 வருடங்களாக சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் அவர்களை விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பை பயன்படுத்தி உடனடியாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பலமாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.