அகமதாபாத்;
படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, படேல் சமூக இளைஞரான ஹர்திக் படேல், காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவங்கி நடத்தி வருகிறார்.

குஜராத் தலைநகரான அகமதாபாத் நகரத்தில் 11 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹர்திக் படேலின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இந்த உண்ணாவிரதத்தில், தான் இறந்து போகலாம் என்று கருதி, தனக்குப்பின் தன்னுடைய உடமைகள் யாருக்குச் சேர வேண்டும் என்று உயில் ஒன்றையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹர்திக் படேல் தயார் செய்துள்ளார். இதனால் குஜராத் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான- படேலின் இந்த உண்ணாவிரதத்திற்கு, காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹாவும், ஹர்திக் படேலை நேரில் சந்தித்து அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடன் பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா, பாஜக முன்னாள் முதல்வர் சுரேஷ் மெகரா, மகாராஷ்ராவைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி. நானா படேல் ஆகியோரும் சென்று படேலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.

பாஜக-வுக்கு எதிரான போராட்டத்திற்கு பாஜக-வின் மூத்த தலைவர்களே நேரில் சென்று ஆதரவு அளித்திருப்பது, குஜராத் பாஜக-வினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.