தீக்கதிர்

ரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி புழுங்கல் அரிசி வழங்க கோரிக்கை

ஈரோடு,
ரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி தரமான புழுங்கல் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ரேசன் கடைகளில் புழுங்கல், பச்சரிசி மற்றும் பாமாயில் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிகப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக புழுங்கல் அரிசி குறைந்த அளவே ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பெரும்பாலான ரேசன் கடைகளில் பச்சரிசி மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, புழுங்கல் அரிசி தட்டுப்பாடின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாமாயில் எண்ணெய் சுமார் 60 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவதால் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கிடைக்காத நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக, வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு சமையல் எண்ணெயை வாங்கும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே, ரேசன்கடைகளில் புழுங்கல் அரிசி மற்றும் பாமாயில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.