தீக்கதிர்

ராகுலுக்கு ஆதரவு; மோடிக்கு எதிர்ப்பு.. ஆர்எஸ்எஸ்- காரர் தருண் விஜய்-க்கும் ‘அட்மின்’ பிரச்சனையாம்..!

புதுதில்லி;
‘திருக்குறள் யாத்திரை, பாரதியார் பவனி’ என்று தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, ஆர்எஸ்எஸ் அமைப்பால் அனுப்பி வைக்கப்பட்டவர் தருண் விஜய். ஆனால், அவரது நாடகம் எடுபடாமல் போனது. இதற்கிடையே அவரது எம்.பி. பதவியும் காலாவதியானதால்- ஊடக வெளிச்சம் இல்லாமல் சிறிதுகாலம் ஆள் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்தும், பிரதமர் மோடியை விமர்சித்தும் ட்விட்டரில் பதிவிட்டு- சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களையே கிறுகிறுக்க வைத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டிருந்த நிலையில், அவரை பாஜக-வினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ராகுல் அசைவம் சாப்பிட்டதாகவும் கண்டித்தனர்.

இந்நிலையில்தான், “இந்த யாத்திரை ராகுல் காந்திக்கும், சிவனுக்கும் இடையிலானது; சிவனை விட பெரியவர்கள் யாருமில்லை; எனவே, இதை பற்றி மற்றவர்கள் கருத்து சொல்லத் தேவையில்லை” என்று ட்விட்டரில் குதித்து, ராகுலுக்கு தருண் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும், “ராகுல் காந்தியை விமர்சிப்பவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தனக்கு நன்றாகவே தெரியும்; ஆணவம் பிடித்த அவர்களின் செயலை உலகம் அறிந்தே இருக்கிறது” என்று பிரதமர் மோடியின் பெயரை நேரடியாக குறிப்பிட்டும் விமர்சித்துள்ளார்.வெறிகொண்ட ஆர்எஸ்எஸ்-காரரான தருண் விஜய்-யின் இந்த பதிவு சங்-பரிவாரங்களை பதற்றத்திற்கு உள்ளாக்கியது. தருண் விஜயா, இப்படி உண்மையை பேசுகிறார்? என்று அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எச். ராஜா கூறியதைப் போல, இந்த ட்விட்டர் பதிவைத் தான் போடவில்லை என்றும், இதையொட்டி எனது அட்மினை நீக்கி விட்டேன் என்றும் தருண் விஜய் தற்போது சமாளித்துள்ளார்.