ஈரோடு,
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் பவானி ஆற்றில் நீர் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரம் மற்றும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். கடந்த சில வாரங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று இரவு அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அதேநேரம், அக்டோபர் மாத இறுதி வரை அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால் அதிகப்படியான உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அணைக்கு நீர்வரத்து சராசரியாக 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 300 கனஅடி வரை இருந்தது. இதனால் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கனஅடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 2 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால், வியாழனன்று காலை அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்ததால் காலை 9 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடி குறைக்கப்பட்டு தற்போது 1500 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் வழக்கம் போல் 2300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 1778 கனஅடியாக உள்ளது. அதேநேரம், நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. வியாழனன்று மாலை 3 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.93 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 30.2 டிஎம்சியாகவும் உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.