சேலம்,
சேலத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய வாலிபர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகரத்தின் மையப் பகுதியில் செயல்படும் வித்யாமந்திர் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் சதீஸ் என்பவர் அச்சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டில் சோர்வாக இருந்ததை அறிந்த பெற்றோர்கள் அவரிடம் விசாரித்ததில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியும், ஆவேசமுமடைந்த சிறுமியின் பெற்றோர், பள்ளிக்கு சென்று ஆசிரியர் சதீஸை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கினர். இதன்பின்னர் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் சதீஸ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், வியாழனன்று சேலம் மகளிர் நீதிமன்றத்தில் துணை நீதிபதி இளவரசி முன்னிலையில் தனி அறையில் வைத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடைபெற்றது. இதில் ஆசிரியர் சதீஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக நீதிபதியிடம் சிறுமி தெரிவித்தார்.

திசை திருப்பும் பள்ளி நிர்வாகம்:
இதற்கிடையே, ஆசிரியரின் பாலியல் சீண்டலால் சிறுமி பாதிக்கப்பட்ட பிரச்சனையை மூடிமறைக்கும் வகையில் பள்ளி நிர்வாகமானது ஆசிரியர் சதீசுக்கு ஆதரவாக மற்ற ஆசிரியர்களை தூண்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், சம்மந்தப்பட்ட சிறுமி, பள்ளி கட்டணத்தை சரிவர செலுத்தவில்லை என்றும், சரியாக படிக்கவில்லை என்றும் தவறான தகவல்களை கூறி பிரச்சனைகளை திசைதிருப்ப முயலுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பள்ளி நிர்வாகம் கூறுவது தவறு என்பதை மெய்பிக்கும் வகையில் சம்மந்தப்பட்ட சிறுமி கல்வி கட்டணத்தை முறையாக கட்டிய ரசீது மற்றும் கடந்த காலங்களில் நல்ல மதிப்பெண் எடுத்ததாக பள்ளி நிர்வாகம் வழங்கிய சான்றிதழ்களை சிறுமியின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் காட்டினர்.

வாலிபர் சங்க நிர்வாகிகள் கைது:
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளி நிர்வாகத்திற்கு காவல்துறையினரும் உடந்தையாகியுள்ளனர். ஆசிரியரை தாக்கியதாக பள்ளி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சேலம் அழகாபுரம் காவல்துறையினர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் கதிர்வேல் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் தந்தை பிரகாஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் வியாழனன்று மாலை வாலிபர் சங்க நிர்வாகிகள் சதீஸ்குமார், கதிர்வேல் ஆகிய இருவரை காவல்துறையினர் திடீரென கைது செய்தனர். இவர்கள் மீது 7க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுவும், கடுமையான குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் மீது பதியப்படும் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரைகைது செய்ய வலியுறுத்திய வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளையே காவல்துறையினர் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.