புதுதில்லி:
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-க்கு பிறகு, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும், வரி வசூலும் அதிகரித்துள்ளதாக மோடி அரசு கூறியிருந்தது.
நடப்பாண்டில் அது மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தது. அதாவது, வரி ஏய்ப்புக்கான வழிகள் அடைக்கப்பட்டு விட்டதால், வரிகள் கொட்டப் போகின்றன என்று கூறியது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் வருமான வரிக் கணக்கல் முடிவடைந்த நிலையில், வரி வருவாயின் நிலை குறித்து தணிக்கை அலுவலகம் அறிக்கை அளித்துள்ளது. அதில், மோடி அரசு எதிர்பார்த்த அளவிற்கு வரி வசூலாகவில்லை என்றும், கடந்த நிதியாண்டைக் காட்டிலும், நடப்பு நிதியாண்டில் வரி வசூல் மிகவும் மோசமாக குறைந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளது.

2017-18 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் 14.4 சதவிகிதம் அளவிற்கு உயரும் என்று மோடி அரசு எதிர்பார்ப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், 6.6 சதவிகிதம் அளவிற்கே நேரடி வரி வசூல் உயர்ந்துள்ளது. இது கடந்த 2016-17ஆம் ஆண்டைக் காட்டிலும் வெறும் 0.6 சதவிகிதம் மட்டுமே அதிகமாகும். இந்த வகையில் முன்கூட்டி செலுத்தப்படும் வருமான வரியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவை ஒருபுறமிருக்க, நிறுவன வரிகள் மிகப்பெரிய அளவிற்கு அடி வாங்கியுள்ளது.
2017-18 நிதியாண்டில் நிறுவன வரிகள் சுமார் 10.15 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மோடி அரசு கூறியிருந்தது. ஆனால், வெறும் 1 சதவிகிதம் மட்டுமே நிறுவன வரியில் உயர்வு ஏற்பட்டுள்ளது. நிறுவன வரிகளில் முன்கூட்டி செலுத்தப்படும் வரியும் 0.57 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

நேரடி வரி வசூலைப் பொறுத்தவரை, இந்த வரிகளில் பெருமளவு திருப்பி அளிக்கப்பட்டு விட்டதால், வசூல் குறைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதனைக் கணக்கில் கொள்ளாமல் வரி வசூல் அதிகரிக்கும் என்று மோடி அரசு பொத்தாம் பொதுவாக கணக்கிட்டு விட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: