திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் நிர்ணயக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இரு திரையரங்குகள் உள்ளிட்ட 6 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தொழிலாளர் துறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லெனின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் உத்தரவின்படியும், கோவை கூடுதல் ஆணையர் செந்தில்குமாரி அறிவுரைகளின் படியும், புதனன்று திருப்பூர் தொழிலாளர் துறை ஆய்வாளர்கள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள் மற்றும் வணிகவளாகங்களில் பொட்டலப் பொருட்களில் நிர்ணயக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விறிகப்படுவது தொடர்பாக கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு 45 திரையரங்குகளில் மேற்கொண்டனர். இதில் 2 திரையரங்குகளில் பொட்டலப் பொருட்கள் சில்லரை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படுவது கண்டறியப்பட்டது. மேலும், 9 வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 4 கடைகளில் விற்கப்படும் பொட்டலப் பொருட்களில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதனால், 2 திரையரங்கு உரிமையாளர்களின் மீதும் 4 கடை உரிமையாளர்கள் மீதும் சட்ட ரீதியான டைவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, வணிகர்கள் உபயோகத்தில் வைத்திருக்கும் அனைத்து கருவிகளையும் உரிய காலத்தில் மறு பரிசீலனை செய்து முத்திரையிட்டுக் கொள்ள வேண்டும். மேலும், முத்திரையிடாத தராசுகளை பயன்படுத்துவோரின் தராசுகள் பறிமுதல் செய்வதோடு, ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையினைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்து குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.