ஐதராபாத்;
தெலுங்கானா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது. காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் நீடிக்க ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறையாக 2014-இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையிலான அரசின் 5 ஆண்டுகள் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவைடைகிறது.

இந்நிலையில் தெலுங்கானா மாநில அமைச்சரவைக்கூட்டம் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இதில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா மாநில அமைச்சரவையை கலைப்பது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சட்டமன்றத்தை கலைக்கும் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் வியாழனன்று மதியம் வழங்கினார். அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதை அடுத்து சந்திரசேகர ராவின் அரசு வியாழனன்று மதியம் கலைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் வரை, காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி வகிக்கவேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு சந்திரசேகர ராவ் விரும்பவில்லை. முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்டமன்றத்தை கலைந்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.