தாராபுரம்,
தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தாராபுரம் நகர கூட்டுறவு வங்கியில் 11 இயக்குநர்களுக்காக தேர்தல் அறிவிக்கப்பட்டு இம்மாதம் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுகவினர் இணைந்து போட்டியிட்டனர். அதிமுக சார்பில் வங்கியின் முன்னாள் தலைவர் சாமிநாதன், நகர அவை தலைவர் தெண்டபாணி, நகர துணை செயலாளர் நாட்ராயன், ரஜினி முனுசாமி, வங்கியின் முன்னாள் இயக்குநர்கள் தனலட்சுமி, சித்ரா மற்றும் மகளிரணியை சேர்ந்த பொன்னி, கல்பனா ஆகிய 8 பேரும், திமுக சார்பில் வழக்கறிஞர் உதயசந்திரன், மணிகண்டன், முத்துமணி ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் வாரணவாசை, நவநீதன், பரமேஸ்வரன், ஜாபர்சாதிக், கலாராணி, மீனாட்சி, சுப்புலட்சுமி ஆகிய 7 பேரும் போட்டியிட்டனர். இதில் தேர்தல் முடிவுகளில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அமமுக தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வாரணவாசை என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தேர்தல் குறித்து ஆட்சேபனை கடிதம் கூட்டுறவு சங்க திருப்பூர் இணைபதிவாளருக்கு 4 ஆம் தேதி அளித்துள்ளேன். தேர்தல் முறைகேடாக நடைபெற்றுள்ளது. வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டுப்போடப்பட்டுள்ளது. எனவே தேர்தல் முடிவை ரத்து செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்த வழக்கின் விசாரணை இன்று (7ஆம் தேதி) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர் குழு பதவி ஏற்ககூடாது என கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளதாகவும், தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்புவிழா நடைபெற ஆட்சேபம் தெரிவித்து மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து வங்கி முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தாராபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.