புதுதில்லி;
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சில நாட்களுக்கு முன்னதாக அனைத்து ஊடகங்களுக்கும் ஆலோசனை ஒன்றை வழங்கியிருந்தது.
அதில், ஊடகங்களில் ‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்; அதற்கு பதிலாக பட்டியல் சாதியினர் (எஸ்.சி) என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

‘தலித்’ என்ற சொல்லாடல் 1940-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து நடைமுறையில் இருக்கும் சொல்லாகும். அதுமுதல் நாடு முழுவதும் உள்ள பட்டியல் சமூகத்தினர், பரவலாக தங்களை தலித் என்றே குறிப்பிடுகின்றனர். நொறுக்கப்பட்ட மக்கள் என்ற பொருள்படும் ‘தலித்’ என்ற பெயரில், 1970-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் ‘தலித் பேந்தர்ஸ்’ என்ற இயக்கமும் தொடங்கப்பட்டது.

எனவே, நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ‘தலித்’ என்ற வார்த்தைக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்தது கண்டனத்திற்கு உள்ளானது. சிலர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்நிலையில்தான், “தலித் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது; ஊடகங்களின் விவாதங்கள், கட்டுரைகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்; தாழ்த்தப்பட்ட பிரிவினரை தலித் என்று குறிப்பிடலாம்” என்று மோடி அரசு திடீரென தனது நிலையிலிருந்து பின்வாங்கியுள்ளது.
அதேவேளையில், அரசியல் சட்டப்படி பட்டியல் சாதியினர் என்பது மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால், காவல்துறையால் எழுதப்படும் புகார்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் ‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: