தீக்கதிர்

தர்ஹாவில் குண்டுவைத்த குற்றவாளியை மாலை அணிவித்து வரவேற்ற பாஜக..!

பாரூச்:
ஆஜ்மீர் தர்ஹாவில் குண்டுவெடிப்பு நடத்தி 3 பேரை படுகொலை செய்த குற்றவாளியை- மாலை, மரியாதை, வாணவேடிக்கைகளுடன் பாஜக-வினர் வரவேற்றது, அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஆஜ்மீர் தர்ஹா-வில், சங்-பரிவாரத்தைச் சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் குண்டுவைத்தனர். இந்த குண்டுவெடித்து 3 பேர் பலியானதுடன், 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாவேஷ் படேல், தேவேந்திர குப்தா ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது.

ஒராண்டு கடந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே விடப்பட்டுள்ளனர். இவர்களில் பாவேஷ் படேல் குஜராத் மாநிலம் பாரூச் நகரைச் சேர்ந்தவர் என்ற நிலையில், அவருக்கு பாஜக, விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வரவேற்பு அளித்துள்ளனர்.

பாவேஷ் படேல், பாரூச் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதும் அவரை தோளில் தூக்கிச் சுமந்தும், மாலை, மரியாதைகள் செய்தும் வாண வேடிக்கை, நடன நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். காவிக்கொடியை கையில் ஏந்தியபடி வெறிக்கூச்சலிட்டுள்ளனர்.

இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலத்தில் குண்டுவைத்து, 3 பேரின் உயிரைப் பறித்த, ஒரு கொலைக்குற்றவாளிக்கு பாஜக-வினர் அளித்த இந்த வரவேற்பு பாரூச் நகர மக்களை அருவருப்புக்கு உள்ளாக்கியுள்ளது.