தேனி,
ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு மாணவர்களை நன்கொடை வசூல் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் வைகை அணை சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி துவங்கி 25 ஆண்டுகள் ஆனநிலையில் இந்த ஆண்டு வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. வெள்ளிவிழா நடக்கவுள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம்அறிவித்துள்ள பரிசுமழை குழுக்கள் திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா 25 நபர்களிடம் நிதிவசூல் செய்து கொடுக்க வேண்டும். 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ளமாணவர்கள் தலா 20 ரூபாய் சீட்டுகள் கொண்ட 25 ரசீதுகளுடைய நன்கொடை புத்தகம், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலா 30 ரூபாய் கொண்ட நன்கொடை ரசீது புத்தகமும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 ரூபாய் நன்கொடை ரசீதுபுத்தகமும் வழங்கப்பட்டது. வசூலிக்கும் தொகையை கொண்டு வெள்ளிவிழா கொண்டாடுவது என்றும் நிகழ்ச்சி நடைபெறும் அன்றுபரிசுமழை திட்டத்தின்படி குழுக்களில் போடப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு கால்பவுன் தங்கமோதிரம், சைக்கிள், மின்சார அடுப்பு, குக்கர் உள்ளிட்ட 10 வகையான பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

இப்புத்தகத்தை பெற்றுக்கொண்ட பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர், மற்றும் உறவினர்களிடம் கட்டாயமாக பள்ளி நிர்வாகம் அறிவுறுத்திய தொகையை வசூலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களை கட்டாய வசூல் செய்யகோரிய பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறைஅதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். மேலும் மாணவர்களிடம் முறைகேடாக நிதி வசூல் செய்யும் பள்ளிநிர்வாகம் மீது உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். இல்லையென்றால் நிர்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து கூறுகையில், தனியார் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டதாக புகார் ஏதும் வரவில்லைஎன்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.