ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்ட கடையை திறக்க முயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான 40 கடைகள் கனி மார்க்கெட் பகுதியில் இயங்கி வருகின்றன. இங்குள்ள கடைகளை ஒரு நபருக்கு ஒரு கடை என்ற விகிதத்தில் கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது. அதன் அடிப்படையில் கடை எண் 1 நீதிமோகன் என்பவரும், 2-வதுகடையை சக்திவேல் என்பவரும் ஏலம் எடுத்தனர். இந்த நிலையில் கடந்த 19 ஆண்டு காலமாக சக்திவேல், அருகிலுள்ள நீதிமோகன் கடையையும் உள்வாடகைக்கு எடுத்து இரண்டு கடையையும் சேர்த்து ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் நீதிமோகனை அழைத்து ஏற்கனவே கடை நடத்தி வரும் நபருக்கு மற்றொரு கடையையும் வாடகைக்கு விடுவது என்பது மாநகராட்சி நிர்வாகத்தின் விதிகளுக்கு மாறானது என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும், நீதிமோகனின் கடையை காலி செய்து மீண்டும் அவரிடமே ஒப்படைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கடந்த 5 மாதங்களுக்கு முன்ன சக்திவேலுக்குநோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தின் நோட்டிஸ் தொடர்பாக எவ்விதபதிலும் அளிக்காமல் சக்திவேல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து நீதிமோகனுக்கு சொந்தமான கடையில் உள்ள ஜவுளிப் பெருட்கள் அனைத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் ஜப்தி செய்தனர். இந்நிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட கடையை வியாழனன்று நீதிமோகனும், சத்திவேலும் சீலை உடைத்து திறக்க முயற்சித்துள்ளனர். இதனையறிந்த அருகில் இருந்த வணிகர்கள் மாநகராட்சி நிர்வாகம் ஜப்தி செய்த பிறகு எப்படி கடையை திறக்கலாம். இது விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும். கடையை மறுஏலம் விடவேண்டும் என கோரி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.