திருப்பூர்,
பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மாணவியருக்கு மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வியில் சிறந்து விளங்கினாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வியைத் தொடர முடியாத மாணவிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் பேகம் ஹஸரத் மஹால் தேசிய கல்வி உதவித் தொகை என்ற திட்டம் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டு (18 – 19) கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் www.maef.nic.in என்ற இணையத்தில் ஆன்லைன் மூலம் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் பிற திட்டங்களில் உதவித் தொகை பெற்றால் இந்த திட்டத்தில் உதவி பெற முடியாது.

இத்திட்டத்தில் 9, 10 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ.10 ஆயிரம் வரையும், 11, 12ஆம் வகுப்புக்கு ரூ.12 ஆயிரமும் இரு தவணைகளில் மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பப்படும். இத்தொகையில் பள்ளி சேர்க்கை, கற்பிக்கும் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருள்கள் மற்றும் உண்டு உறைவிடம் ஆகிய செலவினங்கள் அடங்கும். இத்திட்டத்தில் பயனடைய குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண் முந்தைய வகுப்புகளில் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பித்தவுடன் இணைய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துஅனைத்து சான்று ஆவணங்களுடன் பள்ளிதலைமை ஆசிரியர் முதல்வர் சான்றளித்த கையொப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செயலர் மற்றும் சிஇஓ, மௌலானா ஆஸாத் கல்வி அறக்கட்டளை, மௌலானா ஆஸாத் வளாகம், செல்ம்ஸ்போர்ட் ரோடு, புதுதில்லி ரயில் நிலையம் (பாகர்கஞ்ச் பகுதி) எதிரில்,புதுதில்லி 110 055 என்ற முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.கூடுதல் விபரங்களுக்கு www.maef.nic.in.,http://scholarship-maef.org/ என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.