சென்னை,

குட்கா முறைகேடு புகாரில் ஆலை உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பி.செந்தில் முருகன் உட்பட 6 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.  இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து  குட்கா விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் குட்கா விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து குட்கா ஆலை பங்குதாரர் மாதவராவ் வீட்டிலும், குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் உதவியாளர் வீட்டில் இருந்து ரகசிய டைரி கைப்பற்றப்பட்டது.
அந்த டைரியில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாநகராட்சி உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது.

ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் எந்தெந்த தேதிகளில் எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரமும் துல்லியமாக எழுதப்பட்டு இருந்தது.
அதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் அந்த டைரியில் இடம் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்பட 23 அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக குட்கா பங்குதாரர் மாதவராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாதாமாதம் தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும் லஞ்சம் கொடுத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சில போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். நொளம்பூர் புதிய போலீஸ் நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் முன்னாள் போலீஸ் கமி‌ஷனரான ஜார்ஜின் வீட்டிலும் சோதனை நடந்தது . இதையடுத்து இன்று குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், உமா சங்கர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.