சென்னை,
2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் கடந்த 2016ஆம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் தெரியவந்தது.

அப்போது சிக்கிய டைரியில் எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்ற விவரம் இருந்தது. முதலில் மாநில லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை நடத்தியது. அதில் முன்னேற்றம் இல்லாததால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வாரம் சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிபிஐ அதிகாரிகளிடம் ஒரு ரகசிய டைரி சிக்கியது. அதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல்கள் இடம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து காவல்துறையினர் மாதவராவுக்கு சொந்தமான செங்குன்றம் அருகே உள்ள குடோனுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் செப்.5 அன்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும்
டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 35 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

லஞ்சம் வாங்கி கொடுப்பதற்காகவே சென்னையில் உள்ள சிலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருவதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நபர்களை சுற்றி வளைத்ததில் நந்தகுமார், ராஜேந்திரன் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரும் லட்சக்கணக்கான ரூபாயைஅதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளனர். சென்னையில் ரகசிய இடத்தில் இவர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில் குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.