தீக்கதிர்

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்

திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி, மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட பகுதியான ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு 1வது வீதியில் முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு15 நாட்களுக்கு மேலாகிறது. மேலும், குடிநீருக்கு மாற்று ஏற்படும் செய்யப்படவில்லை. இந்நிலையில், குடிநீர் விநியோகத்தை சீராக்கக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊத்துக்குளி முக்கிய சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் சமாதானம் பேசிய காவல்துறையினரிடம், மாநகராட்சி அதிகாரிகளை நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, மாநகராட்சி 3 வது மண்டல உதவி ஆணையாளர் சபியுல்லா பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.