===வெ.ஜீவகுமார்===
மாண்டியா மாவட்டத்து விவசாயி அண்டை மாவட்டத்திற்கே தண்ணீர் தர மாட்டார் என கர்நாடகா முன்னாள் முதல்வர் கிருஷ்ணா (இப்போது பி.ஜே.பியில் உள்ளார்) ஒரு முறை பெருமிதப்பட்டார். மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் மைசூர் மாவட்டத்து கபினி, ஹாசன் மாவட்டத்திலுள்ள ஹேமாவதி, ஹேரங்கி அணைகள் வெள்ளத்தில் மிதந்தன.தண்ணீர் திரவ பூதமானது. கால்களை இழுத்தது. கரைகளை உடைத்தது. வீடுகளை சாய்த்தது. உயிர்ப்பலி வாங்கியது. ஒரு கட்டத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி குளிரில் நடுங்கிக் கூறினார்.

“அணைக்கு வினாடிக்கு 35,000 கன அடி நீர் வருகிறது. உபரி நீரை எங்கே வைப்பது? அதை தான் தமிழகத்துக்கு திறக்கச் சொன்னோம். திறக்காவிட்டால் நமக்கு பாதுகாப்பு இல்லை.”
திறக்கச் சொன்னது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல, இயற்கை.
நதி எங்கே போகிறது? தமிழகம் தேடி என தாய் பிள்ளையிடம் தாவுவது போல் காவிரி தமிழகத்திற்குள் பாய்ந்தது. தடுத்தால் தம் சடலம் கூட கிடைக்காது என்ற சூழலில் கர்நாடக அரசியல்வாதிகள் மலை உச்சியில் ஓடி ஒளிந்தனர். சரி தண்ணீரை தமிழகம் எவ்வாறு ஏந்தியது?

“அவர்களாலும் தேக்க முடியவில்லை. நம்மாலும் தேக்க முடியவில்லை. உபரி நீரை எப்படி கணக்கெடுப்பது?” என தமிழக முதல்வர் எடப்பாடி தேம்பினார். மேட்டூர் அணை திறந்தது ஜூலை 19. மேட்டூருக்கு நீர் வரத்து ஜூலை 10 முதல் அதிகரித்தது. ஜூலை 16 முதல் 19 வரை மேட்டூருக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. ஜூலை 17ல் ஒரு லட்சத்து ஏழாயிரம் கன அடி வந்தது. சில சமயங்களில் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கன அடி வரை தண்ணீர் வரத்து இந்த ஆண்டில் இருந்தது.

கடலுக்குத் தேவை ஓரளவு நன்னீர் தானே தவிர தொந்தி அல்ல. உபரி நீரால் வங்கக் கடலின் வயிறு பருக்கிறது. உபரி நீர் யாருக்கும் உதவாத நீரானது. அதே சமயம் கடைமடை கட்டாந்தரையானது. பாளம் பாளமாக பூமி வெடித்திருக்கிறது. இதற்குக் காரணம் நீர் மேலாண்மையின் தோல்வியே. ஒருபுறம் உணவு மிஞ்சி தர்மசாலைகளில் சோற்றுப்பருக்கை மிதிபடுகிறது. மறுபுறம் பந்தியில் உட்கார்ந்த பாதிபேர் பசி மயக்கத்தில் விழிகள் செருகிக் கிடக்கின்றனர். காரணம் உணவின் பிழையா ? வினியோகிப்பவரின் பிழையா? உணவின் பிழையன்று.

பாத மண்துகளை தலையில் தாங்கிய மன்னன்
தமிழகம் இப்போது தான் முதன் முதலில் மனித ஜீவராசிகள் குடியேறிய நிலம் அல்ல. முந்தைய நிகழ்வுகள் தமிழகத்தை வேறு விதமாக காட்சிப்படுத்துகின்றன. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் கல்வெட்டு (கி.பி 815-860) நீர் பாய்ச்சல் முறையில் ஒழுங்கு தவறியோருக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை பேசுகிறது. திருவெறும்பூரில் ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலம் என்ற அக்ரஹாரம் இருந்தது. கிராமத்து ஏரியை ஆழப்படுத்த திருவெறும்பூர் மலையில் சிவன் கோவிலை நிர்மாணித்த செம்பியன் வடிவேலன் முன்வந்தார்.

45 கழஞ்சு தங்கமும் தர இசைந்தார். அதற்கு ஈடாக நெல்தீர்வை வசூலித்து கிராமப்பேரவை உறுப்பினர் தருவதற்கு ஒப்பந்தம் உருவானது. சூரிய சந்திரர் இருக்கும்வரை ஏரி தூர்வாருவது ஒப்பந்தம் ஆகும். பாண்டியர் கால பராமரிப்புக்கும் சான்று உண்டு. ஏரியைச் சீரமைக்க நிலம் கொடை தந்து அந்த வருவாயில் ஏரியை தூர்வார வேண்டும்; கரையைப் பலப்படுத்த வேண்டும் என ஒரு மன்னர் உத்தரவிட்டார். கடைசி வரியில் “இனி எந்தக் காலத்திலும் ஏரியையும் மதகையும் குமிழி தூம்பையும் யார் காப்பாற்றுகிறார்களோ அவர்கள் பாதத்தில் ஒட்டியுள்ள சிறு மண் துகளை என் தலையில் தாங்குகிறேன்.” என்ற சொற்கள் இடம் பிடித்தன.

உலகின் முதல் அணை கி.மு. 6000த்தில் எகிப்தில் கட்டப்பட்டது. நைல் நதி அருகில் ஓடையில் முதல் வெள்ளம் வந்தது. அணை அடித்துச் செல்லப்பட்டது. அங்கு மணல் இல்லை. சுமேரிய நாகரீகத்தில் சுட்டகல்லால் அணை கட்டினர். அதுவும் கரைந்தது. அணைக்கட்டுகள் வரலாற்றில் இன்று வரை பயன்பாட்டில் உள்ள அணை கி.பி 200இல் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையாகும். மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் எப்படி அணைக்கட்டு கட்டுவது என பிரிட்டனுக்கு 19ஆவது நூற்றாண்டின் இறுதியில் தெரியவந்தது. பேயர்டு ஸ்மித் என்பவர் 1853இல் கல்லணையை கண்டு பொறியியல் சாதனை என பிரமித்தார். கல்லணையின் தொழில் நுட்பம் எகிப்துக்கு பிந்தையதாக பல்லவருக்கு முந்தையதாக அமைந்தது.

1874இல் பிரிட்டனின் சர் ஆர்தர் காட்டன் கூறினார்.“நாம் இங்கு வாழ்வோர் காட்டுமிராண்டிகள் என எண்ணுகிறோம். அவர்களோ நம்மை சண்டை மட்டும் போட தெரிந்த காட்டுமிராண்டிகள் என நினைக்கிறார்கள். பாசன ஏரிகளை உருவாக்கவோ பராமரிக்கவோ தெரியாத காட்டுமிராண்டிகள் நாம்” எனக் கூறி மேலும் சொன்னார். “மணற்பாங்கான பகுதியில் அணை கட்டும் தொழில் நுட்பத்தை தமிழர்களிடம் கற்று உலகெங்கும் பல பாலங்களை நாம் கட்டினோம். என்றென்றும் தமிழருக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம்.” இந்தச் சாதனை தொடர்ந்தது. தாய்லாந்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்க 1948இல் ஐ.நா. நெல் பாசன வல்லுநர்கள் நால்வரை அனுப்பியது. இதில் ஒருவர் வங்காளி மற்ற மூவரும் தமிழர்கள்.

ஏக்கருக்கு 4 டன் மகசூல் காட்டினார்கள். பின்னால் இது மதராஸ் முறை சாகுபடி என அழைக்கப்பட்டது. தென்கிழக்கு ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சாகுபடியில் தமிழரின் தாக்கம் இருந்தது. வானம் மின்னிய தென்மேற்கு பருவமழையின் வெளிச்சம் தமிழகத்தில் நிலத்தை இருகூறாக கிழித்துக் காட்டியது. தமிழகத்தில் இப்போது ஒருபக்கம் வெள்ளம், மறுபக்கம் வறட்சி. ஒருபக்கம் பூக்கள். மறுபக்கம் முட்கள். ஒருபக்கம் பசுமை. மறுபக்கம் பாலைவனம். இது அரசாங்கம் ஏற்படுத்திய அசமத்துவம்.

ஏழுவகை பாசன வேலைகள்
முன்னர் பாசன வேலைகளை ஏழு வகையாக வரிசைப்படுத்தினர். வரத்து வாய்க்கால் சீரமைப்பு, ஏரி தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், பண்ணை மேம்பாட்டுப் பணிகள், மதகுகள் செப்பனிடுதல், கலிங்கு செப்பனிடுதல், உபரி நீர் பாதை சீரமைப்பு. இவை போலவே மழை நீரை சேமிக்க ஏரி, குளம், குட்டை, கயம், மடு, வாவி, கிடங்கு, தடாகம், பொய்கை, ஊரணி இருந்தன. இத்தகைய எதுவும் இப்போது இல்லை.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 2,517கி.மீ நீளத்திற்கு 36 கிளை ஆறுகள். இதில் ஏ பிரிவு வாய்க்கால் 1,665 கி.மீ. மேலும் பி,சி,டி,இ,எப்,ஜி பிரிவு வாய்க்கால்கள் 6,900 கி.மீ. நீளம் என ஏறத்தாழ 28,500 வாய்க்கால்கள் தூர்வாராமல் தூர்ந்து கிடக்கின்றன. மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஒரு அறிவிப்பு மூலம் டெல்டாவை எச்சரித்தது. ஒட்டுமொத்த நாகை 100 சதவீதம் உப்பானது. திருவாரூர் மாவட்டம் 50 சதவீதம் உப்பானது. டெல்டாவில் 20 முதல் 25 சதவீதம் நிலம் விவசாயத்திற்கு உதவாது. தண்ணீர் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தால் இந்நிலை மாற்றப்பட்டிருக்கலாம். தமிழக அரசின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து முன்னூற்று அறுபது கோடி (ரூ.1,59,360 கோடி) ஆகும். நீர் நிலை பராமரிப்புக்கு 117 கோடி ஒதுக்கீடு செய்யப்போவதாக உயர்நீதிமன்றத்தில் 2014 ல் தமிழக அரசு கூறியது. அதெல்லாம் நடக்கவே இல்லை.

ஒதுக்கீடு என்றால் அரசாங்கம் தன் பட்டுத்துணிக்கும் முந்திரி பருப்பு விருந்துக்கும் ஒதுக்குவதே என கருதுகிறது. பராமரிப்பு வேலையையே செய்ய அரசு திணறும் போது காவிரி-அக்கினி-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு, மேட்டூர்-சரபங்கா-ஐயாறு வேலைகள் எப்போது நடக்கும் என்றே தெரியவில்லை. இதே போல் முடிக்கப்பட்ட பணி ஒன்று உண்டு. இது கரூர் மாயனூரில் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்ட அணை ஆகும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை இவற்றுக்கு எடுத்துச்செல்ல அங்கு கால்வாய் இல்லை. இதனால் எந்த பயனும் இல்லை.

சமவெளியில் தடுப்பணைகளே கட்டமுடியாது என முதலில் எடப்பாடி கூறினார். பிறகு மேலணையை ஸ்டெதாஸ்கோப் வைத்து காய்ச்சல் பார்த்தார். இப்போது கட்டலாம் என்கிறார். “ஓடும் ஆற்றை நடக்கச்செய், நடக்கும் ஆற்றை நிற்கச்செய், நிற்கும் நீரை மண்ணுள் இறக்கு” என்று ராஜஸ்தான் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் கூறினார். தமிழகத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை. இதற்கு காரணம் மணல்கொள்ளையும் ஆகும். ஓடையின் வாழ்க்கை மணலில் எழுதப்பட்டது என்பர். நதிக்கரையிலிருந்து மலைவரை மணல் பரவி விரிந்தது ஒரு காலம். இப்போதோ தேசிய பசுமைத்தீர்பாயம் ஒரு நாளைக்கு 5000 லோடு லாரி மணல் எடுக்க அனுமதித்தாலும் 55,000 லோடு திருடப்படுகிறது. ஆற்று மணல் அள்ளப்படும் போது அங்கு நிலத்தடி நீர் குறைகிறது. உப்பு நீர் உள்ளே புகுகிறது. மேலும் மணல் உருவாக அங்கே பல ஆண்டுகள் ஆகிறது.

ஆற்றுப் பால விரிசலும் ஆட்டம் கண்ட அணையும்…
பாசனத்தின் இன்னொரு பிரச்சனையாக இப்போது இருப்பது அணைக்கட்டுகளை பாதுகாப்பதும் ஆகும். 1834-1836 ல் முக்கொம்புவில் மேலணை கட்டப்பட்டது. 1839இல் கீழணை அணைக்கரையில் கட்டப்பட்டது. இவற்றை கட்டிய ஆர்தர்காட்டன் ஆந்திராவில் கோதாவரியின் குறுக்கே தௌலீஸ்வரன் அணைக்கட்டையும் கட்டினார். ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆற்று மணல் அள்ள தடை உள்ளது. அங்கே அணைக் கட்டுகளுக்கு வராத ஆபத்து தமிழத்தில் ஏற்பட்டுள்ளது. ஆற்றுப்பாலங்கள் யாவும் விரிசல் கண்டு உள்ளன.
இயற்கை 2005 அக்டோபரில் சங்கு ஊதியது. அப்போது காவிரியில் 3 இலட்சத்திற்கு மேல் கன அடி நீர் வந்தது. மேலணை(முக்கொம்பு) அப்போதே ஆட்டம் கண்டது. ஆயினும் இந்த 13 ஆண்டுகளில் ஒரு சீரமைப்புப் பணியும் நடக்கவில்லை. இப்போது 9 மதகு உடைந்தது. 24 கிராமத்தில் தண்ணீர் புகுந்தது.

உபரிநீர் என்று யாருக்கும் உதவாமல் 100 டிஎம்சிக்கு மேல் ஆற்று தண்ணீர் கடலில் கரைகிறது. தினமும் இது நடக்கிறது. ஒரு டிஎம்சி நீர் என்பது 100 கோடி கனஅடி ஆகும். ஒரு டிஎம்சி நீர் மூலம் 7000 ஏக்கர் பாசனம் செய்யலாம். 1991 முதல் 2005 வரை 1039 டிஎம்சி வெள்ளம் கொள்ளிடத்தின் வழியே கடலுக்கு போனது. இது மேட்டூர் அணையின் கொள்ளளவில் 11மடங்கு ஆகும். ரூ. 51,950கோடி மதிப்புள்ள நெல் உற்பத்தி இதன் மூலம் நடந்து இருக்கலாம். 2013இல் டெல்டாவில் 53 சதவீதம் மழைக்குறைவு ஏற்பட்டது அதேசமயம் 17 டிஎம்சி கடலுக்கு போனது. இதன் நெல் உற்பத்தி மதிப்பு 850 கோடி ஆகும். நடப்பு ஆண்டிலோ நான்கு முறைக்கு மேல் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது. முதல் கட்டமாக 8 நாட்களும் இரண்டாம் கட்டமாக 12 நாட்களும் வெள்ள நீர் கடலை நோக்கி ஆராவாரித்து ஓடியது. பல ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் அதன் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் திறக்கமுடியவில்லை.

நீரை தடுக்கும் நெய்வேலி காட்டாமணக்கு போன்ற தாவரங்களும் வலுவிழந்த கரைகளும் மணல் வயிறு அறுவைசிகிச்சை செய்யப்பட்ட ஆறுகளும் தண்ணீரை உள்ளிழுக்க விடவில்லை. இனி எப்போதுமே தண்ணீர் வராது என அரசு மனக்கணக்கில் இருந்தது. எனவே தான் தூர்வாரும் பணிகளே நடக்கவில்லை. இப்போது அவசரம் அவசரமாய் அறிவிக்கிறார்கள்.

1. உடைந்த முக்கொம்பு அணையிலிருந்து 100 மீ தொலைவில் கொள்ளிடத்தில் ஒரு பகுதியில் ரூ.325 கோடி மதிப்பில் ஒரு கதவணையும் 18 கண்மாய் பகுதியில் ரூ.85 கோடி மதிப்பில் ஒரு கதவணையுமாம். நிபுணர் குழுவாம். திட்டமதிப்பீடாம், இத்தியாதியாம்.

2. மழைநீர் சேமிக்க 3 ஆண்டு காலத்தில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடாம். முதல் கட்டமாக 292 கோடியில் 62 தடுப்பணைகளாம்.

3. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ரூ. 26.31 கோடி செலவில் 139 நீர்நிலைகள் புனரமைப்பாம்.

4. 100 நாள் பணியாளர் மூலம் ரூ. 22 1/4 கோடி செலவில் 116 கி.மீ. தூர்வாரும் பணியாம்.
தைப் பொங்கல் வரும் முன்னர் ஒட்டடை அடிப்பர். சுண்ணாம்பும் வண்ணமும் பூசுவர். பொங்கல் முடிந்து பங்குனி மாதத்தில் அந்த வேலையை எந்த புத்தி சிகாமணியும் பார்த்தது இல்லை. தமிழக அரசோ மார்ச்சில் செய்ய வேண்டிய நீர் பாசன ஒழுங்கமைப்புப் பணிகளை செப்டம்பரில் துவங்குகிறது. சுவர்கள் ஆட்டம் கண்டு சரிந்து இடியும் நேரத்தில் தமிழக அரசு சுண்ணாம்பு அடிக்கப் போவதாக பண வாளியை தூக்கிக் கொண்டு வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.