புதுதில்லி;
ஏகே-103 ரக துப்பாக்கி கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தைத் அதானிக்கு வழங்க முடிவு செய்திருந்த மோடி அரசு, ரபேல் ஊழல் விவகாரத்தைத் தொடர்ந்து தற்போது அந்த அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது.

ரபேல் ரக போர் விமானங்களை வாங்கும் விஷயத்தில், பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் மட்டுமே, முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், மோடி அரசு திடீரென, அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தை ஒப்பந்தத்திற்குள் கொண்டுவந்து, இந்த நிறுவனத்தின் மூலமாக ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய புதுத்திட்டம் தீட்டியது.முன்பு ஒரு விமானம் 526 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விலையையும் 1670 கோடி ரூபாயாக உயர்த்தி மிகப்பெரிய முறைகேட்டை மோடி அரசு அரங்கேற்றியது.

இந்த ஊழல் தற்போது மோடி அரசின் கழுத்தை நெறுக்கிக் கொண்டிருக்கிறது. ரபேல் ரக போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பான ஊழலை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனால் சுதாரித்துக் கொண்ட மோடி அரசு, ‘ஏகே- 103’ ரக துப்பாக்கிகளை அதானி குழுமம் மூலமாக வாங்கும் ஒப்பந்தத்தைத் தற்போது ரத்து செய்துள்ளது.சுமார் 6 லட்சம் ‘ஏகே- 103 ரக’ துப்பாக்கிகளை ரஷ்ய நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டிருந்தது. மேலும், ரபேல் விமான விஷயத்தில் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்திற்கு ஆதாயம் தேடித்தந்தது போல, துப்பாக்கி வாங்கும் விஷயத்தில்- மோடியின் நண்பரான அதானி ஆதாயம் அடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதாவது அதானி குழுமம் மூலமாகவே, ரஷ்ய நிறுவனத்திடமிருந்து ஏகே-103 ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்படும் என்பதுதான் அது.கடந்த ஏப்ரல் மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ரஷ்யா சென்றிருந்தார். அவர், ஏகே-103 ரக துப்பாக்கிகள் கொள்முதல் தொடர்பாக ரஷ்யாவுடன் பூர்வாங்க பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அதைத்தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள், ரஷ்யா நிறுவனத்துடன் இணைந்து ஏகே-103 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் என்று கூறினார். அவர் அப்போது கூறியது, அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை மனத்தில் வைத்து. ஆனால், இடைப்பட்ட காலத்தில், பொதுத்துறை நிறுவனங்களிடம் போதிய நிதியாதாரம் இல்லை என்று கூறி, அதானி குழுமத்திற்கு அந்த ஒப்பந்தம் மாற்றபடுவதாகவும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அதானிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தை இணைத்து மோடி அரசு செய்துள்ள ஊழல், தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியிருப்பதால், அதானி குழுமத்திற்கு ‘ஏகே-103’ ரக துப்பாக்கி ஒப்பந்தம் வழங்கப்பட்டால் அதுவும் பிரச்சனையாகலாம் என்ற அச்சத்தில் தற்போது அந்த ஒப்பந்தத்தை மோடி அரசு ரத்து செய்துள்ளது.
மேலும், பொதுத்துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே இனிமேல் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.