ஈரோடு,
மண் மாதிரி முடிவுகளின் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு இனி உரங்கள் வழங்கப்படும் என்று வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டைகளின் பரிந்துரை அடிப்படையில் உரமிடுதல் குறித்த விழிப்புணர்வு முகாம் பெருந்துறை அடுத்துள்ள பட்டகாரன்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொண்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ஜெயராமன் பேசுகையில், விவசாயிகள் தங்களின் நிலத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரங்கள் இட வேண்டும். எனவே மண் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியமாகிறது. அனைத்து விவசாயிகளும் மண் வள அட்டையைவைத்திருக்க வேண்டும். மண் மாதிரி முடிவுகளின் அடிப்படையிலேயே இனி வரும் நாட்களில் உரவிற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகிக்கப்படும். இதனால் விவசாயிகளின் உர பயன்பாடு வெகுவாக குறையும் என்பதோடு முதலீட்டு செலவும் குறையும் என்றார். முன்னதாக, இம்முகாமிற்கு வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினார். பெருந்துறை வேளாண்மை உதவி இயக்குநர் சங்கர் வரவேற்புரையாற்றினார். மூத்த வேளாண்மை அலுவலர்கள் ஜீவதயாளன் லட்சுமிநாராயணன், நடமாடும் மண்பரிசோதனை நிலைய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.