தீக்கதிர்

இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை,
கோவையில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக இஸ்லாமிய இளைஞர்கள் 5 பேர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி கடந்த செப்.1 ஆம் தேதியன்று சென்னையை சேர்ந்த ஜாபர், இஸ்மாயில், சம்சூதின், சலாவுதீன் மற்றும் கோவையை சேர்ந்த ஆசிக் ஆகிய 5 பேரை கோவை வெரைட்டிஹால் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் இஸ்மாயில் என்ற நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு உதவியதாக ஆட்டோ ஓட்டுநர் பைசல் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அன்வர் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து வந்தவர்களை காவல்துறையினர் பொய் வழக்கில் கைதுசெய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் புனைந்து வருகின்றனர். எனவே அவர்கள் 5 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கைது செய்யப்பட்டுள்ள ஆசிக் என்பவரின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.