தில்லி,
இந்தியாவில் தன்பாலின  உறவை குற்றம் என வரையறுக்கும் சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்து, உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் தன்பாலின உறவு அங்கீகரிக்கப்படாததால், அவை தற்போது வரை குற்றச் செயலாகவே கருதப்படுகிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு தன்பாலின உறவை குற்றச்செயல் என்று கூறியது. இந்தச் சட்டத்தின் கீழ், தன் பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கும் முறையும் நடைமுறையில் இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2009 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு 377 ஐ நீக்கி, தன்பாலின உறவை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒரு சில மதவாத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தன. அதேபோல், ஒரு சில தன்பாலின உறவு ஆதரவாளர்களும் உச்சநீதிமன்றத்தில் 377சட்டப்பிரிவை நீக்கக்கோரி மனு அளித்தனர்.

இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கா், சந்திரசூட், நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகிய நான்கு பேர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா, “ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட உரிமையை இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மறுப்பது மரணத்திற்கு நிகராகும். மேலும் தனிப்பட்ட நபரின் அடையாளத்தை காப்பது ஜனநாயகத்தின் உரிமை என்றும் சமுதாயத்தை விட ஒரு தனி மனித சுதந்திரம் என்பது மிக முக்கியமானது” என்றும் தெரிவித்தார். மேலும் இந்த கருத்துகளை முன்வைத்து, தன்பாலின உறவு குற்றமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பில் தன்பாலின உறவை குற்றம் என வரையறுக்கும் சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்தது.
இந்தத் தீர்ப்பை மறுபரீசிலனை அல்லது திருத்தம் செய்யலாமே தவிர, மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என தன்பாலின உறவை ஆதரிப்பவர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகில் ஏற்கனவே 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.