திருப்பூர்,
இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் தலித் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் இணைத்து வியாழனன்று குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2018 ஜனவரி 1ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த திரண்ட போது, சங்பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கினர்.சங்பரிவார் அமைப்பினரை கைது செய்வதற்கு பதில், மத்திய பாஜக அரசின் மக்கள்விரோத கொள்கைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த இடதுசாரி கவிஞர் வரவரராவ், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெர்னான் கன்சால்வஸ், கவுதம் நவலகா, அருண் பெரைரா மற்றும் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் ஆகிய ஐவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் இந்த சர்வாதிகார போக்கிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டன இயக்கங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் குமரன் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் பி.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ச.நந்தகோபால், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் பி.ஆர்.நடராஜன், அகில இந்திய வழக்கறிஞர் சங்க நிர்வாகி உதயசூரியன், திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்க செயலாளர் கதிர்வேல், தந்தை பெரியார் திராவிட கழக முகில்ராசு, பதியம் அமைப்பின் பாரதிவாசன், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் பவுத்தன், தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான இலக்கிய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். மேலும், திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழங்கங்கள்எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.