புதுதில்லி:
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற தில்லியை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு,அம்மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த பாராட்டு விழாவில் வெண்கலம் வென்ற (மல்யுத்தத்தில்) திவ்யா கரண், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேடையில் இருக்கும் போதே விமர்சித்தார்.

திவ்யா கரண் பேசியதாவது,”இந்த பாராட்டு விழாவை ஏழைக் குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகளில் எங்களைப் போல் முன்னேறுவதற்காக நடத்துவதாக சொல்கிறீர்கள்.காமன்வெல்த் தொடரில் நான் தங்கப்பதக்கம் வென்றபோது,எனது முன்னேற்றத்திற்கு உதவுவதாக நீங்கள் வாக்குறுதியை அளித்தீர்கள்.அதோடு சரி.அதன்பின் நீங்கள் அளித்த வாக்குறுதியை பெறுவதற்காக என் தொலைபேசி அழைப்புக்கு நீங்கள் பதில் அளிக்கக் கூட இல்லை.இப்போது நீங்களே எங்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறீர்கள்.ஆனால் எங்களுக்கு தேவையான நேரத்தில் நீங்கள் எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை. சரியான நேரத்தில் உதவி புரிந்தால் மட்டுமே அனைவரும் தங்கப் பதக்கம் வெல்ல முடியும்” என்று கூறினார்.இதனால் மேடையில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்பட்டது.

 

திவ்யா கரண் விமர்சனத்திற்கு பதிலளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த அரசு செய்ய முயலும் அனைத்து பணிகளுக்கும் தடைகள் உண்டாக்கப்படுகிறது என்பதை நீங்கள் பத்திரிகை மூலம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் மட்டும் குறை கூறவில்லை.என்னிடம் உங்களைப் போல் பல விளையாட்டு வீரர்கள் குறை சொல்லுகின்றனர்.நாங்கள் உருவாக்கும் கொள்கைகள் மற்றும் நல திட்டங்கள் பல உயர்மட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. சமீபத்திய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் காரணமாகவே எங்களால் இந்த பாராட்டு விழாவையாவது நடத்த முடிகிறது” என பதில் அளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.