தீக்கதிர்

அசாம் வெள்ளம் : பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து 22 பேர் மாயம்

கவுகாத்தி
பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காணாமல் போய் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெரு மழை பெய்து வருகிறது.  இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.    இந்த வெள்ளத்தினால் இது வரை 7 மாநிலங்களில் ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.   அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்  மாநிலத்தில் பல இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து கௌகாத்தி நகரின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளம் புகுந்தது.  இதனால் அங்கிருந்தவர்களை மீட்டு கௌகாத்தி நகருக்கு அழைத்து வர மீட்புப் படையினர் நேற்று ஒரு இயந்திரப் படகை எடுத்துச் சென்றனர்.   அந்தப் படகில் கிராமத்தை சேர்ந்த 36 பேரை  ஏற்றிக் கொண்டு வந்தனர்.
அந்த படகு எதிர்பாராத விதமாக வெள்ள நீரில் கவிழ்ந்தது.   படகில் வந்த அனைவரும் நீரில் மூழ்கி உள்ளனர்.   அதில் 11 பேர் உயிருடன் மீட்கப்படுள்ளனர்.   மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 22 பேர் காணாமல் போய் இதுவரை கிடைக்கவில்லை. இதையடுதது காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.